சித்த மருத்துவத்தில் 'காயகல்பம்' என அழைக்கப்படுகிறது தூதுவளை. இதன் இலைகள், தண்டு, காய், பூ என எல்லாமே மருத்துவக் குணங்கள் வாய்ந்தவை. கீரைகளிலேயே இயற்கையான ஸ்டீராய்டு கொண்டது இது. ஆன்ட்டிபாக்டீரியல், ஆன்ட்டி ஃபங்கல் தன்மைகளை உள்ளடக்கிய உன்னதக் கீரை இது!
'வருமுன் காப்போம் என்பதில் நம்பிக்கை உள்ளவர்கள், வாரம் ஒன்றிரண்டு முறைகளாவது தூதுவளைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. எப்போது வரும், எப்படி வரும் என்றே தெரியாத சளி, இருமல் பிரச்னைகளை அண்டவிடாமல் தடுக்கக்கூடியது தூதுவளைக் கீரை. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்தக் கீரையை அடிக்கடி கொடுப்பதன் மூலம் அவர்கள் அடிக்கடி உடல்நலக்குறைவுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளலாம்...'என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் நித்ய. வெறுமனே விதைகளைத் தூவி, வீட்டிலேயே எளிதாக வளர்க்கக்கூடிய இந்த மூலிகைக் கீரையின் அற்புதங்களைப் பற்றிப் பேசுவதுடன், தூதுவளையை வைத்து ஆரோக்கியமான மூன்று உணவுகளையும் செய்து காட்டியிருக்கிறார்.
மருத்துவக் குணங்கள்... சளி, இருமல் சரியாக...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் சளி, இருமலுக்கான மிகச் சிறந்த மருந்து தூதுவளை. இதை கஷாயமாகவோ, வேறு எந்த வடிவிலோ உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு மூக்கடைப்பு, மார்புச்சளி, இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் தொண்டைக் கரகரப்பு போன்றவை வந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். தூதுவளையைக் காய வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு, சூடான பாலில் தினமும் சிறிதளவு கலந்து குடித்து வர, நாள்பட்ட இருமலும் குணமாகும்.
சைனஸ் பிரச்னைக்கும் தூதுவளையைப் பரிந்துரைக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இதன் இலை மற்றும் தண்டுகளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் குடித்துவர, சைனஸால் ஏற்படுகிற மூச்சுத் திணறல் சரியாகும். வைரஸ் மற்றும் ஃப்ளூ காய்ச்சல்களுக்கும் இதை முயற்சி செய்யலாம்.
டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை கரைய...
இன்று டான்சில்ஸ் எனப்படுகிற தொண்டைச் சதை வளர்ச்சி இல்லாத குழந்தைகளே இல்லை. ஒரு கைப்பிடி அளவு தூதுவளையுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றை தலா 10 கிராம் அளவு எடுத்து இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, கால் பாகமாக வற்றச் செய்யவும். அதில் 50 மி.லி. அளவுக்கு தினம் 3 வேளைகள் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் தொண்டைச் சதை கரையத் தொடங்கும்.
ஆஸ்துமா அவதிகளுக்கு...
ஆஸ்துமாவை குணப்படுத்துவதில் தூதுவளையின் மகிமைக்கு இணையே இல்லை. இதன் சாற்றை தேன் சேர்த்து உள்ளுக்கு எடுத்துவர, தீவிர ஆஸ்துமா குணமடைவதுடன், அதன் தீவிரத்தால் ஏற்படுகிற குரல் பாகுபாடு மற்றும் பசியற்ற நிலை போன்றவை சரியாகும்.
புற்றுநோயைத் தடுக்க...
புற்றுநோய்க்குக் காரணமான கார்சினோஜென் தன்மைக்கு எதிராகப் போராடும் தன்மை தூதுவளைக்கு உண்டு என்கிறார்கள். தூதுவளையை வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கப்படுமாம். புகை, மதுப்பழக்கம் உள்ளவர்களும் தூதுவளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தில் இருந்து ஓரளவு மீளலாம் என்கின்றன ஆய்வுகள்.
நீரிழிவு பாதிப்புகளின் தீவிரம் தவிர்க்க...
நீரிழிவு பாதிப்புக்குள்ளாகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவின் காரணமாக, பலருக்கும் செல்கள் மற்றும் திசுக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது. தூதுவளையில் உள்ள ஆன்ட்டி
ஆக்சிடென்ட் தன்மையானது நீரிழிவைக் கட்டுப்படுத்தி, செல்கள், திசுக்கள் பாதிப்பையும் தவிர்க்கிறது. நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தினமும் குறிப்பிட்ட அளவு தூதுவளைச் சாறு எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதோடு, எடையும் முறையாகப் பராமரிக்கப்படுகிறது.
கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு...
தூதுவளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் Anti hepatotoxicity தன்மைகள் கல்லீரலின் ஆரோக்கியத்தைக் காக்க உதவுகின்றன. இதன் பூக்கள் மற்றும் விதைகள் நுரையீரல் புற்றுநோய்க்கான மருந்துத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வயிற்றுக் கோளாறுகளை விரட்ட...
தூதுவளைக் கீரையை மிளகு சேர்த்து அரைக்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டிக் குடித்தால் வாயுக் கோளாறு மற்றும் சூடு காரணமாக ஏற்படும் வயிற்றுவலி பறந்து போகும்.
ரத்த ஓட்டத்தை சீராக்க...
சித்த மருத்துவத்தின் கூற்றின் படி, தூதுவளைக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்தம் உறைவதைத் தடுக்கவும், ரத்தத்தை விருத்தி செய்யவும் கூடிய குணங்கள் உண்டு என்கிறார்கள்.
காதுக் கோளாறுகள் நீங்கவும், நினைவாற்றலுக்கும்...
காதுவலி மற்றும் கேட்கும் திறன் பிரச்னைகளுக்கு தூதுவளையின் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தூதுவளையின் பூக்களுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் சக்தி உண்டு.
மலச்சிக்கல் குணமாக...
தூதுவளைச் செடியில் சிவப்பு நிறத்தில் பழங்கள் வரும். அவற்றைக் காய வைத்துப் பொடித்து உள்ளுக்கு எடுத்து வர, மலச்சிக்கல் சரியாவதுடன், அசிடிட்டி எனப்படுகிற பிரச்னையும் குணமாகும். அதே பொடிக்கு வாதநோய் பாதிப்புகளை சரியாக்கும் குணமும் உண்டாம்.
கால்சியம் பற்றாக்குறையைப் போக்க...
கால்சியம் பற்றாக்குறை ஏற்படுவதால் பற்கள், எலும்புகள் பலமிழக்கின்றன. கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளத் தயங்குபவர்கள், தூதுவளையை 48 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். தூதுவளைக் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர, கால்சியம் பற்றாக்குறை நீங்கும்.
எப்படிச் சமைப்பது?
தூதுவளைக் கீரையில் இடையிடையே குட்டிக்குட்டி முட்கள் இருக்கும். கீரையைப் பறித்ததும் கவனமாக அந்த முட்களை நீக்கிவிட்டு, தண்ணீரில் அலசி சமையலுக்குப் பயன்படுத்தலாம். குழம்பில் சேர்க்கலாம். துவையலாகச் செய்யலாம். அடை, தோசை போன்றவற்றில் சேர்க்கலாம். தூதுவளை அதிகம் கிடைக்கிற போது வாங்கி சுத்தப்படுத்தி, காய வைத்துப் பொடித்துக் கொண்டு, தேவைப்படும்போது உபயோகிக்கலாம். சூப் தயாரிக்க இந்த தூதுவளை பொடி பயன்படும்.
தூதுவளைச் செடியின் காய்களை மோரில் ஊற வைத்து வற்றல் போலக் காய வைத்து பத்திரப்படுத்திக் கொள்ளலாம். குளிர் மற்றும் மழைக்காலங்களில் இந்த வற்றலை குழம்பில் சேர்க்கலாம். எண்ணெயில் வறுத்துப் பொடித்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அந்த நாட்களில் ஏற்படக்கூடிய சுவாசப் பிரச்னைகள் சரியாகும்.
என்ன இருக்கிறது?
(100 கிராம் அளவில்)
ஆற்றல் 40 கிலோ கலோரிகள்
ஈரப்பதம் 84.7 கிராம்
புரதம் 3.9 கிராம்
கொழுப்பு 0.7 கிராம்
தாதுச்சத்து 3.8 கிராம்
கார்போஹைட்ரேட் 4.6 கிராம்
கால்சியம் 334 மி.கி.
பாஸ்பரஸ் 52 மி.கி.
இரும்புச்சத்து 5 மி.கி ..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக